Sep 18, 2025 - 10:02 AM -
0
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் 230 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது.
இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜா, தமது மூன்று திரைப்படப் பாடல்கள் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் அதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதை ஏற்ற நீதிபதி பாடல்களை அப்படத்தில் இடைக்காலத் தடை விதித்து இருந்தார்.
இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குற்றம்சாட்டினார்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கப்படாமல் இருந்தது.
எனவே குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா மைத்ரி மூவீ மேக்கர்ஸ்கு அண்மையில் நோடீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து, நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் வாதிட்ட பட தயாரிப்பு நிறுவனம், இசை நிறுவனங்களிடம் இருந்து இந்த பாடல்களின் உரிமை பெறப்பட்டுள்ளது. இடைக்கால தடையால், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து. படத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களில் திரையிட்ட பின், எவ்வாறு தடை உத்தரவு பெற முடியும் என வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இளையராஜா பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24 ஆம் தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.