வணிகம்
மாணவர்களுக்கான பொருளாதார உதவியாக ரூபா ஒரு பில்லியனுக்கும் மேலான தொகையை SLIIT வழங்கியுள்ளது

Sep 18, 2025 - 03:59 PM -

0

மாணவர்களுக்கான பொருளாதார உதவியாக ரூபா ஒரு பில்லியனுக்கும் மேலான தொகையை SLIIT வழங்கியுள்ளது

மாற்றத்திற்கு வித்திடுகின்ற கல்வி வாய்ப்புக்களை வழங்கி, இலங்கையில் இளைஞர்,யுவதிகளுக்கு வலுவூட்டுவதில் SLIIT ஆனது 25 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் உழைத்து வந்துள்ளது. நாட்டில் பட்டப்படிப்புக்களை வழங்கும் அரச பல்கலைக்கழகம் அல்லாத மிகப் பாரிய கல்வி நிறுவனம் என்ற வகையில், திறமை அடிப்படையிலான புலமைப்பரிசில்கள், உதவிப் பணங்கள், மற்றும் கற்கைநெறி கட்டணங்களுக்கான மானியங்கள் ஆகிய வடிவங்களில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை கொண்ட உதவிகளை SLIIT மாணவர்களுக்கு வழங்கியுள்ளதுடன், திறமைமிக்க மாணவர்கள் நிதியியல் பின்புல வேறுபாடின்றி உயர் கல்விக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்துள்ளது. 

2023 மற்றும் 2024 கற்கை ஆண்டுகளில் மாத்திரம், கல்வித் திறமை மற்றும் இணைப்பாடவிதான சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் தவணைப் பெறுபேறு மற்றும் பரந்த அடிப்படையிலான பெறுபேறுகளுக்கான புலமைப்பரிசில்கள் மூலமாக ரூபா 152 மில்லியன் தொகையை SLIIT வழங்கியுள்ளது. அனைத்து கல்வித் துறைகளிலும் திறமை, சமத்துவம், மற்றும் தேசிய பங்களிப்பு ஆகிய கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் SLIIT ன் நீண்ட கால குறிக்கோளின் பிரதான பாகமாக இப்புலமைப்பரிசிலகள் காணப்படுகின்றன. 

இதை விட, உள்வாரி திட்டங்கள் மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக சுமார் ரூபா 930 மில்லியன் நிதி உதவிகளையும் SLIIT வழங்கியுள்ளது. கல்வி அமைச்சின் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் ஒத்துழைப்புடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை, வேலைவாய்ப்புக்களைப் பெறும் சாத்தியங்களை உயர்வாகக் கொண்டுள்ள துறைகளில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கு கற்கைநெறிக் கட்டணங்களில் கணிசமான மானியத் தொகையை பிரதிபலிப்பதுடன், குறிப்பாக நிதியியல் ரீதியாக முட்டுக்கட்டைகளுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினையும், உதவியையும் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

“திறமைசாலிகளை வளர்த்து, ஒவ்வொரு மாணவரினதும் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் SLIIT ஆழமான அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது. எமது புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் இந்த அர்ப்பணிப்பிற்கு வலுவான சான்றாகக் காணப்படுவதுடன், உண்மையில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்விக்கான வாய்ப்பினை வழங்கி அவர்களுக்கு வலுவூட்டுகிறோம். மேற்குறிப்பிட்ட வாய்ப்புக்களை இந்த ஆண்டிலும் நீட்டித்து, வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கி தைரியமாக, தீர்மானம்மிக்க அடிகளை முன்னெடுத்து வைத்து, தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான தன்னம்பிக்கை மற்றும் கருவிகளை வழங்கி அவர்களை தயார்படுத்துவதற்கு SLIIT ல் இணைவதற்கு இளம் சிந்தனைகளுக்கு உத்வேகமளிப்பதே எமது நோக்கம்,” என்று SLIIT தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க அவர்கள் குறிப்பிட்டார். 

கல்வித்துறை, இணைப்பாடவிதான செயல்பாடுகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் மத்தியில் அனைவருக்கும் சம வாய்ப்பளித்து அரவணைப்பதை ஊக்குவிக்கும் வகையில் தனது புலமைப்பரிசில் கட்டமைப்பை SLIIT கடந்த காலத்தில் விரிவுபடுத்தியுள்ளது. தேசிய க.பொ.த உ/த கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் உச்சப் பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்கும் மாணவர்களுக்கு கற்கைநெறி கட்டணங்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், நென திரிய (Nena Diriya) திட்டத்தின் கீழ் மாதாந்த உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது. உள்ளுர் அல்லது சர்வதேச உ/த பரீட்சைகளில் 3ஏ சித்திகளைப் பெற்றுக்கொள்பவர்களும் பெறுபேறு அடிப்படையிலான கல்விப் புலமைப்பரிசில்கள் மூலமாக முழுமையான அல்லது பகுதியளவு கற்கைநெறிக் கட்டண விலக்களிப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் தகமையைக் கொண்டுள்ளனர். 

இந்த ஆதரவு கல்விக்கும் அப்பாற்பட்ட வகையில் நீண்டுள்ளது. விளையாட்டுக்கள் அல்லது இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் தமது மாகாணத்தை அல்லது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புலமைப்பரிசில்களுடன் அங்கீகாரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். உச்ச பெறுபேறுகளை ஈட்டுகின்ற பட்டதாரி மாணவர்களுக்கும் தாம் கல்வி கற்கும் காலத்தில் திறமை அடிப்படையிலான உதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். 

புலமைப்பரிசில்கள் மற்றும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புக்களை வழங்குவதற்காக தொழில்துறையின் பல்வேறு முன்னணி கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன் SLIIT உழைத்து வருகின்றது. வகுப்பறையில் திறமைகளை வெளிப்படுத்தும் அதேசமயம், யதார்த்த உலகில் மதிப்புமிக்க அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள அத்தகைய தனித்துவமான ஒத்துழைப்புக்கள் மாணவர்களுக்கு இடமளிப்பதுடன், தாம் கற்றுக்கொண்டவற்றை செய்முறையில் பிரயோகிப்பதற்கான வியப்பூட்டும் வாய்ப்புக்களையும், தமது எதிர்கால தொழில்களில் போட்டி அனுகூலத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றன. 

நிதியியல்ரீதியாக இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்கள் கல்வி அமைச்சின் வட்டியில்லா கடன் திட்டத்தினூடாக அரசாங்கத்தின் துணை கொண்ட உதவி, மற்றும் லலித் அத்துலத்முதலி அறக்கட்டளையின் உதவி, விருசர (Virusara Privilege) வரப்பிரசாதத் திட்ட முயற்சி, மற்றும் தனிப்பட்ட பரோபகாரர்களின் புலமைப்பரிசில்கள் உள்ளிட்ட, பல்வகைப்பட்ட பிரத்தியேகமான மானியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் அல்லது கோவிட்-19 தொற்றுநோய் போன்ற தேசிய நெருக்கடி நிலவிய காலகட்டங்களில், எந்தவொரு மாணவரினதும் கல்வி கைவிடப்படாது இருப்பதை உறுதி செய்வதற்காக, தேவை அடிப்படையிலான விசேட நிவாரணத் திட்டமொன்றையும் SLIIT வழங்கியிருந்தது. 

SLIIT வழங்கியுள்ள புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்டவர்களை வெறுமனே பயனாளிகள் என்ற பதத்தினுள் அடக்கி விட முடியாது. விரிவான வழிகாட்டல் ஆலோசனை, தொழில் வழிகாட்டல் உதவி, மற்றும் தலைமைத்துவ விருத்தி அனுபவம் ஆகியவற்றினூடாக அவர்கள் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்த அனுபவங்கள் அனைத்தும் அவர்களை கல்விரீதியாக தேர்ச்சி பெற்றவர்களாக மாத்திரமன்றி, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு பங்களிப்பதற்குத் தேவையான திறன்கள் மற்றும் சிந்தனை கொண்டவர்களாக தயார்படுத்தி, நற்பயனை விளைவிக்கும் பட்டதாரிகளாக புடம்போடுகின்றன. 

SLIIT ன் துணைவேந்தர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் பேராசிரியர் லலித் கமகே அவர்கள் கருத்து வெளியிடுகையில், “SLIIT வெறுமனே பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் ஒரு நிறுவனமல்ல, திறமைகளை இனங்கண்டு, அவற்றை வளர்த்துக் கொள்வதற்கு நாம் இடமளிக்கின்றோம். தமக்குத் தாமே சவால் விடுத்து, முட்டுக்கட்டைகளை அகற்றிய வண்ணம் எழுச்சி கண்டு, மற்றும் தமது திறமைகளுக்கு அர்த்தம் சேர்ப்பிக்கும் ஒன்றை அடைவதற்கு தயாராகவுள்ள மாணவர்களுக்காக எமது புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிக்கோளுக்கு துணையாக செயற்பட்டு, முயற்சிக்கு வெகுமதியளித்து, மற்றும் மூடப்பட்டுள்ள கதவுகளைத் திறப்பதே அவற்றின் நோக்கம். தம்முள் விடாமுயற்சியும், பற்றுறுதியும் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கான வாய்ப்புக்களுடன் SLIIT அவர்களைச் சந்திக்கத் தயாராகவுள்ளது என்ற செய்தியை மாணவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.” மாற்றத்திற்கு வழிவகுப்பதில் இரு தசாப்த காலத்திற்கும் மேலான வரலாற்றுடன், SLIIT புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமானது அந்த நிறுவனத்தின் மேம்படுத்தல், வலுவூட்டல், மற்றும் உத்வேகமளித்தல் என்ற இலக்கினை தொடர்ந்தும் உறுதிப்படுத்தி வருகின்றது. தகவல் தொழில்நுட்பம், வணிகம், பொறியியல், சட்டம், உளவியல், தாதியம், கட்டடக்கலை மற்றும் உயிர்த்தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் தற்போது புலமைப்பரிசில் உதவிகள் வழங்கப்பட்ட மாணவர்கள் நாளைய தலைவர்களாக வளர்ச்சி கண்டு வருகின்றனர். உயர்குடி என்பதை விடுத்து அனைவருக்கும் வாய்ப்பு என்பதற்கு முன்னுரிமையளிப்பதன் மூலமாக, நிதியியல் உதவிக்கான அர்ப்பணிப்பு மாத்திரமன்றி, வளர்ச்சிவாய்ப்பு, நெகிழ்திறன், மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் தேசிய முதலீடாகவும் தனது புலமைப்பரிசில் பாரம்பரியத்தை SLIIT கருதுகின்றது. இப்புலமைப்பரிசில்களின் நற்பயன் அதனைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அப்பால் வியாபித்து, திறன்மிக்க தொழிற்படையின் விருத்தி மற்றும் இலங்கையின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்கும் பங்களிக்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05