Sep 18, 2025 - 06:47 PM -
0
வவுனியா முதல் மஹாவ வரையிலான ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்பட்டது.
இந்த மனுவை மாற்றுத்திறனாளி பெண்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜி. கமலவத்தவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் ரயில்வே பொது முகாமையாளர் ஆகியோர் அதில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், 1996 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவுகள் 23-1 மற்றும் 23-2 இன் கீழ் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதாக சட்டத்தரணி இசுரு மகேஷ் பண்டித தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அணுகல் உத்தரவுகளின்படி மஹாவவிலிருந்து வவுனியா வரையிலான ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படாததால், 1996 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 23 ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, மனுதாரரான மாற்றுத்திறனாளியின் உரிமைகளை பிரதிவாதிகள் மீறியதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
2006 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அணுகல் உத்தரவுகளின்படி மஹாவவிலிருந்து வவுனியா வரையிலான ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ரயில்வே திணைக்களத்திற்கு கிடைக்கும் வருடாந்திர ஒதுக்கீட்டிலிருந்து இந்தப் புதுப்பித்தல் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், 1, 2, 3 மற்றும் 4 ஆம் பிரதிவாதிகளுடன் கலந்துரையாடி இந்தப் புதுப்பித்தல் பணிகளுக்கான செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.