Sep 18, 2025 - 09:29 PM -
0
புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தடை செய்யப்பட்ட ஒருதொகை மீன்பிடி வலைகள் நேற்று முன்தினம் (17) அதிரடிப்படை மற்றும் புத்தளம் நீரியல் வளத் துறை அதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகள் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானவை என புத்தளம் நீரியல் வளத் துறை பிரதிப் பணிப்பாளர் சரத் சந்தநாயக்க தெரிவித்தார்.
மீன்பிடி மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வாழ் வளச் சட்டத்தின் கீழ் மீன்பிடித்தல், நீர்த்தேக்கங்கள், குளம் மற்றும் கடல் எல்லைகளில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட சுமார் 5000 கிலோ கிராமிற்கும் அதிகமான நைலூன் தங்கூஸ் வலைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு புலனாய்வு சேவை வழங்கிய புலனாய்வுத் தகவலின்படி, புத்தளம் அதிரடிப்படை மற்றும் புத்தளம் புத்தளம் நீரியல் வளத் துறை அதிகாரிகளும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.
தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைகள் நாகவில்லு பிரதேசத்தில் உள்ள மூடிய இரண்டு மாடிக் கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.
நாட்டில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட இந்த தங்கூஸ் வலைகள் இந்தியாவில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இரகசியமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைகள் மேலதிக விசாரணைக்காக புத்தளம் நீரியல் வளத் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் , வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் புத்தளம் நீரியல் வளத் துறை பிரதிப் பணிப்பாளர் சரத் சந்தநாயக்க தெரிவித்தார்.
--