Sep 18, 2025 - 10:00 PM -
0
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு வயது 46. நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததை அடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்று சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கருக்கு உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் இன்று காலை ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அதில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ரோபோ சங்கருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் சிகிச்சை பலன் அளிக்காமல் சற்று முன் உயிரிழந்தார்.
ரோபோ சங்கர் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். அதேபோல் தற்போதும் மீண்டு வருவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கையில் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ சங்கர் மறைவுக்கு கமல் ஹாசன், பார்த்திபன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் விஜய் டிவியில் காமெடியனாக தன்னுடைய கெரியரை தொடங்கி, பின்னர் வெள்ளித்திரைக்கு சென்று தனுஷ், விஜய் சேதுபதி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார்.
இவரது மகளான இந்திரஜாவும் சினிமாவில் காமெடி நடிகையாக நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது. தாத்தா ஆனதால் செம குஷியில் இருந்தார் ரோபோ சங்கர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டாப் குக்கு டூப்பு குக்கு சமையல் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.