Sep 18, 2025 - 10:19 PM -
0
2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த அரசாங்க செலவினம் 4,434 பில்லியன் ரூபாய் ஆகும்.
அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் ஊடாக நிதி அமைச்சகத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது ரூ. 634 பில்லியன் ஆகும்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சகத்திற்கு ரூ. 618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பொது நிர்வாக அமைச்சிற்காக ரூ. 596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் ஆண்டிற்கு சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்திற்கு ரூ. 554 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ. 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் கல்வி அமைச்சகத்திற்கு ரூ. 301 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 11 பில்லியன் ஆகும்.
2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2.7 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது சுமார் ரூ. 8 பில்லியன் அதிகமாகும்.
2026 ஆம் ஆண்டில், முக்கியமாக வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 8.29 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை இவ்வாறு, செலவின அளவு அதிகரிக்க காரணமாகும்.
மேலும், 2026 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக ரூ. 488 பில்லியன் ஒதுக்ககப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான செலவுகளை ஈடுகட்ட பெறக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் பெறுதலின் அதிகபட்ச வரம்பு ரூ. 3800 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அதை மீறக்கூடாது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முதலாம் வாசிப்புக்காக செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் நிதியமைச்சர் என்ற முறையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.