Sep 18, 2025 - 11:32 PM -
0
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது.
ஆனால் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்க்கட்சி முன்வைக்கும்போது அதைத் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பெரும் திறமையாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இல்லை. மக்கள் பிரச்சினைகளை ஆளும் தரப்பு சபையில் முன்வைப்பதும் இல்லை. சபை அமர்வில் நாம் மக்களின் இத்தகைய பிரச்சினைகளை முன்வைக்கும்போது, ஒலிவாங்கிகளை துண்டிக்கின்றனர்.
அவை நிலையியற் கட்டளைகளுக்கு புறம்பானவை என்றும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டாலும், எதிர்க்கட்சி எப்படியாவது மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து பதில்களைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் விலச்சிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
30 ஆண்டுகால விடுதலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தத்தின் போதும், விலச்சிய பகுதி மக்கள் பயிர் செய்கையில் ஈடுபட்டு, வீடுகளை அமைத்து, எல்லைக் கிராமங்களில் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர்.
யுத்தம் நிறைவுற்று பல வருடங்கள் கடந்தும் இப்பகுதி மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்துக்கு நாளாந்தம் யுத்தமே செய்து வருகின்றனர். யானை-மனித மோதல்களாலும் இப்பகுதி மக்கள் பன்முக நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர், இதனால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அறுவடைக்கு நிலையான விலை கிடைக்காமையினால், தமது அறுவடைகளை விற்பனை செய்து கொள்ள முடியாமல் வீடுகளில் குவிந்து கிடக்கின்றன.
பயிர் சேதத்திற்கு கூட இழப்பீடு வழங்குவதாக இல்லை. பயிர் காப்பீட்டு முறைகளும் கூட சரியாக முன்னெடுக்கப்படுவதாக இல்லை. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் கூட இதுவரை இழப்பீடு சரியாக வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டாலும், விவசாயிகளினது யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. விவசாயிகளின் யுத்தத்திற்கு தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால் அவற்றைத் தீர்க்க முடியாதுபோயுள்ளதோடு அரசாங்கத்திடம் இதற்கான எந்த பிரயோக ரீதியான பதில்களும் இல்லை.
அரசாங்கம் தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக மக்களிடம் பொய் சொல்லி, ஏமாற்றி, தவறாக வழிநடத்தியது. எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவசாய மக்களுக்காக முடிந்தவரை உரத்த குரலை எழுப்பும்.
விவசாயிகளுக்காக செய்ய முடியுமான சகல பணிகளையும் செய்யும். இந்தப் பிரச்சினைகளுக்கு பதில்களையும் தீர்வுகளையும் நாம் எம்மால் முடிந்ததை செய்து தருவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
60, 70 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்த காணிகளை இன்று அரசியல் காரணங்களுக்காக சூறையாடப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் காணிகளை அபரிப்பதன் மூலம் விவசாய சமூகத்தின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளன.
இதனால் விவசாயிகள் மட்டுமன்றி காட்டு யானை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இந்த பகுதிக்கு வந்து தீர்வுகளை வழங்கவில்லை.
அமைச்சர்கள் மக்கள் மத்தியில் வந்து பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் மக்கள் மத்தியில் வந்து இவ்வாறு பிரச்சினைகளை கேட்டறிகிறோம்.
தற்சமயம் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளும் அல்லது நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆளும் தரப்பினர் பிரதேச மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மக்கள் படும் வலியையும் துன்பத்தையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவர்களின் வலியையும் துன்பத்தையும் நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
மக்களுக்கு நாம் ஏதாவது செய்யும்போது, பொருட்களை விநியோகிக்கிறோம், நிவாரணங்களை விநியோகிக்கிறோம், அதை பகிர்ந்தளிக்கிறோம், இதை பகிர்ந்தளிக்கிறோம் என பகிர்ந்தளிக்கும் அரசியலில் ஈடுபடுகிறோம் என்று நம்மைப் பார்த்து கேலி செய்தனர்.
அவ்வாறு சொல்பவர்களுக்கு அரசியல் செயல்பாட்டின் பரந்த அர்த்தம் புரியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அரசியல் என்பது நாட்டுக்கு சேவை செய்யும் விடயமாகையால், எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் இவற்றை நிறுத்த மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.