Sep 19, 2025 - 10:47 AM -
0
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைது சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள யுவதி, அயல் வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பெட்டியுடன் எடுத்துக் கொண்டார்.
மேலும், மிகுதி 95,000 ரூபாயை ஹட்டன் பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெற்றுக் கொண்டு, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தேயிலை மலையில் வீசியதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணத்தின் உரிமையாளருக்கு குறித்த யுவதி மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸார், குறித்த யுவதியை கைது செய்ததோடு, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பணத்தையும் மீட்டனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட யுவதி ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட யுவதி இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
--

