கிழக்கு
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்!

Sep 20, 2025 - 10:26 AM -

0

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் எனவும், தமிழ் அரசியல்வாதிகள் மக்களைத் திசைதிருப்பி, குழப்பமடையச் செய்யும் வங்குரோத்து அரசியலை முன்னெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு, புதூர் பகுதியில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நேற்று (19) நேரில் சென்று பார்வையிட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர், நேர்த்தியாகவும் நீதியான முறையில் சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தி வருகிறது. அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இதற்கு முன்னர் மீளாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். 

எதிர்க்கட்சியினர், குறிப்பாக வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், எங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த காலத்தில் நடந்தவை உள்ளிட்ட சில விடயங்களை மட்டும் முன்வைத்து, சர்வதேச விசாரணை தேவை என ஐ.நா.விடம் வலியுறுத்துவதாக மக்களைத் திசைதிருப்பி, குழப்பமடையச் செய்கின்றனர். 

ஆனால், நாங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறோம். உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கிறோம். தேவையான சர்வதேச ஆலோசனைகளைப் பெற்று, நேர்த்தியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். 

விரைவில், உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். எங்கள் ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். 

அரசியல் அமைப்பு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களைச் செயற்படுத்துவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இவை நிறைவேற்றப்பட்டவுடன், தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் மக்களிடையே செல்லுபடியாகாது. 

அவர்கள் தங்கள் அரசியல் இருப்பைப் பாதுகாக்க மேற்கொள்ளும் செயற்பாடுகள் மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் பிரேரணைக்கு இவர்கள் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியது மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. 

இவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், தங்கள் இருப்பைப் பாதுகாக்க பொய் கூறுவதாகவும் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். 

இதனால், இந்த வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதி இரா. சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாவில், எருவில் பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. 

ஆனால், அது மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாதவாறு தாழ்வான குளம் போன்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டபோது, அது குளம் போலக் காட்சியளித்தது. 

இந்த நிதி கையாளப்பட்ட விதம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.செம்மணி மற்றும் குருக்கள்மடம் புதைகுழிகள் தொடர்பான ஆய்வுகளுக்கு தேவையான சர்வதேச உதவிகளையும் நிதியையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எங்கள் நீதி அமைச்சர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறோம்.தேசிய மக்கள் சக்தி, மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய சட்டரீதியாகவும் நீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கிறது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05