Sep 20, 2025 - 11:03 AM -
0
இந்தியா மற்றும் ஓமனுக்கு எதிரான நேற்று (19) இடம்பெற்ற போட்டியில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100 ஆவது விக்கெட்டை எடுத்தார்.
20 ஓவர் சர்வதேச போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். தனது 64 ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை அவர் அடைந்தார்.
அர்ஷ்தீப் சிங் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் அறிமுகம் ஆனார். 3 ஆண்டுகள் 74 நாட்களில் அவர் இந்த சாதனையை புரிந்தார். டெஸ்ட்டில் வினோ மன்காட்டும் (23 போட்டி) ஒரு நாள் போட்டியில் கபில்தேவும் (77 ஆட்டம்) 100 விக்கெட்டை எடுத்த முதல் இந்திய வீரர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 20 ஓவர் போட்டியில் மற்ற இந்திய வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் (80 ஆட்டம்), ஹர்திக் பாண்ட்யா (117) ஆகியோர் தலா 96 விக்கெட்டும், பும்ரா 92 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
100 விக்கெட்டை குறைந்த கால அளவில் கைப்பற்றிய 2 ஆவது வீரர் அர்ஷ்தீப் சிங் ஆவார். பக்ரைன் வீரர் ரிஸ்வான் பட் 2 ஆண்டுகள் 240 நாட்களில் 100 விக்கெட்டை தொடடார். அதிகவேகமாக 20 ஓவர் விக்கெட்டை வீழ்த்திய 4 ஆவது வீரர் அர்ஷ்தீப் சிங் ஆவார்.
ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 53 ஆட்டத்திலும், நேபாளை சேர்ந்த சந்தீப் லமீச்சனே 54 போட்டியிலும், ஹசரங்கா 63 ஆட்டத்திலும் வீழ்த்தி இருந்தனர்.

