Sep 20, 2025 - 05:38 PM -
0
79 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
1946 செப்டம்பர் 6 ஆம் திகதி டி.எஸ். சேனாநாயக்க அவர்களால் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப் பழமையானதும், விடுதலையின் முன்னோடியுமான ஒரு முக்கிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில், இ.தொ.கா. ஸ்தாபகர் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்து, மலையக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வெற்றியடையச் செய்தமை, வரலாற்றில் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும், தற்போதைய ஐ.தே.க. தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நெருங்கிய நட்புறவை பேணியபடி, மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயலாற்றியுள்ளார்.
அதேபோல், இன்றைய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான் 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தில் இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றிருந்தேன்.
அதுமாத்திரமன்றி தற்போதைய பாராளுமன்றத்தின் ஐ.தே.க இன் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற விவகாரகங்களுக்கு பொருப்பான குழுத் தலைவராகவும் நான் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் பல்வேறு தரப்பினர்களால் இ.தொ.கா ஆனது தனது கட்சியின் சொந்த சின்னமான சேவல் சின்னம் இருக்கும் பட்சத்தில் ஏன் ஐ.தே.க இன் யானை சின்னத்தில் போட்டியிட்டார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், இ.தொ.கா என்பது எங்களது குடும்பம்., எங்களுடைய அடையாளமாகும். எந்த வகையிலும் அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அந்த வகையில் "மலையக மக்கள் என்றால் தேயிலைத்துறை சார்ந்தவர்கள் என்று சிலர் வரையறுத்துள்ளார்கள். ஆனால் அவர்களும் தேசிய ரீதியில் இனைந்து பயனிப்பதற்கான அடித்தலமாகவே நாங்கள் யானை சின்னத்தில் போட்டியிட்டோம்" என ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய ஐ.தே.க க்கு, இ.தொ.கா சார்பிலான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின் நாடு முழுவதையும் பல தசாப்தங்களாக வழிநடத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகத்தையும், ஒற்றுமையையும், நாட்டின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. இன்று, 79 ஆவது ஆண்டு நிறைவை வெற்றியுடன் கொண்டாடும் இக்கட்சிக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒற்றுமையுடனும், உறுதியுடனும், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக இணைந்து செயலாற்றுவோம் என வாழ்த்துரைத்துள்ளார்.
--

