Sep 23, 2025 - 09:24 AM -
0
இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரம் நூதனமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 28 வயதுடைய இரு சந்தேக நபர்களும், 25 வயது 40 வயது சந்தேக நபர்களும், நேற்று (22) சோதனை நடவடிக்கையின் போது சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதானவர்கள் வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கல்லரிச்சல் 04 பகுதி வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதி சம்மாந்துறை 03 பகுதியை சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2,321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள், ஒரு தொகை பணம், 3 கையடக்கத் தொலைபேசி, 3 பவர் பேங்க், 3 வங்கி அட்டை என்பன மீட்கப்பட்டிருந்தன.
மேலும் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சொதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--