Sep 23, 2025 - 10:34 AM -
0
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140 இற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்காக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் சமீபத்திய முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அளிக்கப்படும்.
அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரித்து வரும் தலைவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை. ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன அரசு இருக்காது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு எதிராக, அந்தப் பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்திருக்கிறேன். இதை நாங்கள் உறுதியுடனும், சாதுர்யமான அரசியல் திறமையுடனும் செய்துள்ளோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூதக் குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம், மேலும் இந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளார் என தெரிவித்தார்.

