Sep 23, 2025 - 10:53 AM -
0
பாலஸ்தீன நாடு என்பது ஒரு வகை உரிமை. அது பரிசு அல்ல. நாட்டுக்கான அனுமதியை மறுப்பது என்பது பயங்கரவாதிகளுக்கு பரிசளிப்பது போன்றது. 2 நாடுகள் இன்றி, மத்திய கிழக்கில் அமைதி என்பது ஏற்படாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பை இலக்காக கொண்டு, காசாவுக்கு எதிராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வீரர்களும் அடங்குவர். போர்நிறுத்த பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில், போரானது தொடர்ந்து வருகிறது.
இதில், பாலஸ்தீனியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உணவு, உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பட்டினியால், குழந்தைகள் உள்பட பலரும் நோய் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல் பற்றி ஆலோசிக்க அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் உறுப்பு நாடுகளின் கூட்டம் நடந்தது.
இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடந்து வரும் மோதல் பல தலைமுறைகளாக தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. பேச்சுவார்த்தையில் நம்பிக்கையற்ற நிலை உள்ளது. தீர்மானங்கள் காற்றில் பறக்க விடப்பட்டு வருகின்றன என வேதனையுடன் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இறையாண்மை கொண்ட இரு சுதந்திர, ஜனநாயக நாடுகள் என்ற அடிப்படையில் இரு நாடுகள் என்பதே தீர்வாக இருக்கும்.
அவரவர்கள், தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்குள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வசிக்க வேண்டும்.
சர்வதேச சட்டம், ஐ.நா. தீர்மானம் மற்றும் பிற தொடர்புடைய ஒப்பந்தங்களின்படி இணைந்து, ஜெருசலேம் நகரை தலைநகராக இரு நாடுகளும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
பாலஸ்தீன நாடு என்பது ஒரு வகை உரிமை. அது பரிசு அல்ல. நாட்டுக்கான அனுமதியை மறுப்பது என்பது பயங்கரவாதிகளுக்கு பரிசளிப்பது போன்றது. 2 நாடுகள் இன்றி, மத்திய கிழக்கில் அமைதி என்பது ஏற்படாது என்று கூறினார்.

