Sep 25, 2025 - 01:24 PM -
0
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரஹேனாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜென்டில்மேன் படத்தில் வரும் குச்சி குச்சி ராக்கமா என்று தொடங்கும் பாடல் வரிகளை குழந்தை குரலில் பாடியது இவர்தான். வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவரின் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தன. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்தார் ஜி.வி.பிரகாஷ்.
சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் கொடுத்ததன் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இவரின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்ததன் காரணமாக புகழின் உச்சிக்கே சென்றார் ஜிவி பிரகாஷ். இந்த நிலையில், பள்ளி காலம் முதல், தான் காதலித்து வந்த தன்னுடைய தோழியும், பிரபல பாடகியுமான சைந்தவியை, பெற்றோர்கள் சம்மதத்துடன் 2013 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் இணைந்து பாடல்கள் பாடியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பல காதல் பாடல்கள் மிகப்பெரும் ஹிட் கொடுத்தது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் வெற்றியடைய, அவர்களுக்குள் இருந்த காதலும் முக்கிய பங்கு என ரசிகர்கள் உட்பட பலரும் கூறி வந்தனர். இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'அன்வி' என்ற பெண் குழந்தை பிறந்தது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பு மற்றும் நடிப்பு என கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் சைந்தவி இசை நிகழ்ச்சி, பின்னணி பாடுவது, இசைக்கென ஸ்டுடியோ தொடங்கியது என இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான Bachelor படத்திற்கு பின் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அது முற்றிப்போக இருவரும் ஆறு மாதங்களாக தனித்தனியே வசித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் அதிகாரபூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்தனர். பிரிவதாக அறிவித்தாலும், சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றது வைரலானது.
இந்த சூழலில் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கில் இம்மாதம் 30 ஆம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று (25) நடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதி செல்வ சுந்தரி முன்பு குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். தொடர்ந்து இசையமைப்பாளர் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.

