Sep 26, 2025 - 05:22 PM -
0
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கல்வி விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டுப் போய்விடலாம். இங்கே அப்படி பேச முடியாது. உலகத்தில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான்.
என்னுடைய அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பாடசாலைக்கு சென்று படித்ததால், நான் 3 வேளையும் சாப்பிட்டு பாடசாலைக்கு சென்றேன். என்னுடைய அப்பா நடந்து பாடசாலைக்குச் சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரயில் மூலம் பாடசாலைக்கு சென்றேன். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறைகள் நன்றாக இருக்கும். இதை என்னுடைய குடும்பத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன்.
என்னுடைய அப்பாவுடைய வீட்டில் இருந்த வசதியால் அவர் நினைத்த படிப்பை படிக்க முடிக்கவில்லை, கிடைத்த படிப்பைதான் படித்தார். அவர் ஒரு டிகிரி வாங்கினார். அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ.., என்று இரண்டு டிகிரி படிக்க வைத்தார்.
என்னுடைய அக்கா எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.பி. என 3 டிகிரி முடித்துவிட்டார்.
சினிமா துறை மிகவும் சவாலானது. அங்கு சவால்கள் வரும் போதெல்லாம் எனக்கு வரும் ஒரு தைரியம் என்னவென்றால் என்னிடம் 2 டிகிரி இருக்கிறது. இங்கிருந்து என்னை அனுப்பினால் ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ள முடியும். நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா மீதான ஆர்வத்தால் இங்கே வந்துவிட்டேன்.
தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளையும், இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற, கை நிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, எல்லாருடைய முன்பு கவுரவமாக வாழ ஒரே தீர்வு நன்றாக படிப்பதுதான். மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் நிறைய சாதனையாளர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.

