Sep 26, 2025 - 06:17 PM -
0
அக்கரப்பத்தனை ஆதார வைத்தியசாலையில் நேற்று (25) காலை 7.30 மணியளவில் அப்பகிரன்லி தோட்டத்தில் உள்ள 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை சந்திரகுமார் என்பவர் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடார்.
அனுமதிக்கப்பட்ட நபர் வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மாலை வேளையிலும் வைத்தியர்கள் குறித்த நபரை பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின் மருந்துகள் வைத்தியசாலை தாதியர்களால் வழங்கியுள்ளார்கள். இருப்பினும், மாலை 7.45 மணியளவில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியர்கள் முறையாக உரிய நபருக்கு சிகிச்சை வழங்காத காரணத்தினாலே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்து நேற்று இரவு வைத்தியசாலையில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலத்தினை வைத்தியசாலையில் இருந்து பிரேத அறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்த போதிலும், முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இன்று காலை 150 இற்கும் மேற்பட்ட மக்கள் வைத்தியசாலையில் ஒன்று கூடி இறந்தவருக்கு நீதி வேண்டுமென தெரிவித்து இறந்தவரின் உடல்நிலை கொண்டு செல்ல முடியாதென தெரிவித்தனர். இதனை அடுத்து பொலிஸார் எடுத்த முயற்சியால் பல மணி நேரத்திற்கு பின்பு சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்டபோது,
குறித்த நபருக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கியதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பரிசோதனை செய்ததோடு மாலை வேலையிலும் பரிசோதனை மேற்கொண்டு அவருக்கான மருந்துகளை வழங்குமாறு தாதியர்களிடம் வழியுருத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாதியர்களால் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன இருப்பினும் குறித்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக வைத்தியசாலை வைத்தியர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இருந்த போதிலும் வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் ஊழியர்களை இடமற்றம் செய்யுமாறு தெரிவித்து, பொதுமக்களிடமிருந்து கையொப்பம் பெற்று அக்கரப்பத்தனை பிரதேச சபை உப தவிசாளரிடம் கையளித்தனர்.
--

