Sep 29, 2025 - 02:48 PM -
0
காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயது இளைஞரை நேற்று (28) பிற்பகல் கைது செய்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் காத்தான்குடி பொலிஸார் மீட்டனர்.
மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஜே.பி. ரத்நாயக்கவின் வழிகாட்டலில், பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், மாவட்ட புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளும், வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
--