Sep 29, 2025 - 02:50 PM -
0
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் விசாரணை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளதுடன், இதன் போது ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளன.
ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு நாள் கழித்து அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அதுவரை தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் சந்தேகநபர் கூறியுள்ளார்.
வட்ஸ்அப்பில் பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு கொள்கலன்களும் மித்தேனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது பெக்கோ சமன், "அண்ணா, இரண்டு கொள்கலன்கள் உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும். அதை செய்து தர முடியுமா? என்று சம்பத் மனம்பேரியிடம் கேட்டிருந்தார், அதற்கு அவர், "தம்பி பிரச்சினை ஏதும் வருமா?" என்று கேட்டிருந்தார்.
இதன்போது, பெக்கோ சமன், "அப்படி ஒன்றுமில்லை, அண்ணா. சில கற்கள் வருகின்றன. அவை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன" அதை எடுத்துச் செல்லவே வேண்டும் என்று மனம்பேரி கூறியிருந்தார்.
அதன்படி, சம்பத் மனம்பேரி வேறொரு நபருடன் சென்று இரண்டு கொள்கலன்களையும் பொறுப்பேற்று மித்தேனிய பகுதிக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அது குறித்த ஆவணங்களை பெக்கோ சமன் வட்ஸ்அப் மூலம் சம்பத் மனம்பேரிக்கு அனுப்பியிருந்தார்.
இதற்கு சம்பத் மனம்பேரியின் சகோதரரான பியல் மனம்பேரியும் உதவியுள்ளார்.
இருப்பினும், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிறகு, அச்சத்திற்கு உள்ளான சம்பத் மனம்பேரி, தனது சகோதரருடன் சேர்த்து அந்த இரசாயன தொகையை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர், அவர் மித்தேனிய பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பெக்கோ சமன் மற்றும் தரூன் என்பவர் மூலம் அறிமுகமான மன்னார் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல்காரரான டைகர் என்பவரின் உதவியுடன் அவர் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குற்றக் கும்பல் உறுப்பினர்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்த சம்பத் மனம்பேரியின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிக்க விசாரணை அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அவர்களால் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாகவும் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்
"சேர், நான் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி. எனவே, மொபைல் போன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் வெள்ளவத்தையில் தண்டவாளத்தில் வைத்து அதனை அழித்தேன்," என்று மனம்பேரி அதற்கு பதிலளித்துள்ளார்.
பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, கேரள கஞ்சா கடத்தல் மற்றும் வியாபாரம், கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொல்ல தம்மால் வழங்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர்களுடன் அவர் நெருங்கிய உறவைப் பேணி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அது குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் அந்த பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வா ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

