Sep 30, 2025 - 02:20 PM -
0
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவால் பொருளாதார மத்திய நிலையம் நாடா வெட்டி மூன்றாவது தடவையாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
200 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முதல் தடவையாக திறந்து வைக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களால் செயலிழந்த நிலையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையிலான குழுவினரால் மீள திறந்துவைக்கப்பட்டபோதும் அதுவும் செயலிழந்து போனது.
இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்த வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மீளவும் பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
--

