Oct 2, 2025 - 10:50 AM -
0
அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01) மாலை ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது.
இறுதிநாளில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் திருக்கோவில், நாவிதன்வெளி, காரைதீவு, ஆலையடி வேம்பு தவிசாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கின் மூன்று மாவட்டங்களின் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் ஐ.நாவுக் கான மகஜர் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தவிசாளர்களிடம் வழங்கி வைத்தனர்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறவுகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறி முறையை நிராகரிக்கின்றோம், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோரு கின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
--