Oct 2, 2025 - 01:09 PM -
0
13 ஆவது மகளிர் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா 30 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 02 ஆம் திகதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் இடம்பெறுகிறது.
பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் இடம்பெறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கிண்ண போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப் - 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இலங்கையை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 269 ஓட்டங்கள் அடித்த நிலையில், இலங்கை அணி 211 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 05 ஆம் திகதி கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கை குலுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் உலக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகள் இந்தப்போட்டியின் போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் கை குலுக்குதல் அல்லது வீராங்கனைனகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2025 ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தானுடனான போட்டிகளின் போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கை குலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.