Oct 4, 2025 - 04:58 PM -
0
யாழ்ப்பாணம், புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறைக்கான மறுசீரமைப்பு கட்டமைப்பு ஆரம்ப நிகழ்வு இன்று (04) காலை நடைபெற்றது. 
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் மக்களின் வரிப் பண நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 
இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர் 
மிக நீண்ட காலமாக தீவக மக்கள் துறைமுகம் புனரமைக்கப்படாததால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்நோக்கி வந்தனர் தற்போது துறைமுகம் புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதால் கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவகப் பகுதிகளுக்கு செல்லும் கடல் பயணிகள் மற்றும் உல்லாச பயணிகளுக்கு இலகுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 
அத்தோடு இந்நிகழ்வில் நெடுந்தீவு பகுதிக்கான நீண்ட காலப் பிரச்சினையாக காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான ஒப்பந்தமும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துடன் பொற்றொலிய கூட்டத்தாபனத்தால் அமைச்சர்கள் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டது.
--

