வடக்கு
பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப் படைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்!

Oct 5, 2025 - 02:06 PM -

0

பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப் படைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்!

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளார். 

பாக்கு நீரிணை பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. 

தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . 

இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். 

இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளனர். 

இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மபிரியா தம்பதியினரின் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனான புவி ஆற்றல், 2022 ஆண்டு சென்னை, செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 

2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். 

தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். 

அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு ஊனம் தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை-தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரினையை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (3) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். 

இலங்கை தலைமன்னாரில் இருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கு சென்றனர். 

இவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். 

அரிச்சல்முனை வந்தடைந்த சிறுவன் புவி ஆற்றல், அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், இந்திய மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05