Oct 6, 2025 - 10:43 AM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று கடந்த 04 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று (05) எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 04 ஆம் திகதி மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் இதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிஸார் குறித்த பகுதியில் இருந்த மனித உடலின் எச்சங்கள் பொருட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி நேரோஜினி ஆர்த்தனன் குறித்த எலும்புக்கூட்டு தொகுதியை பார்வையிட்ட பின்னர் பதில் நீதிபதி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த எலும்புக்கூட்டு பாகங்கள் மற்றும் தடயப்பொருட்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
குறித்த காணியில் மண்டையோடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம், நஞ்சு மருந்து கான், ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்பட்டதோடு பல நாட்களான நிலையில் மனித உடற்பகுதிகள் நாய்கள் மற்றும் இதர விலங்குகளால் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
--

