Oct 6, 2025 - 01:32 PM -
0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரச வைத்தியசாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த வைத்தியசாலையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் 2 ஆவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (05) இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வைத்தியசாலையில் முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து வைத்தியசாலையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் அம்மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா, பாராளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் வைத்தியசாலைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.
தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கும் போது,
அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.
தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதலமைச்சர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான வைத்தியசாலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

