Oct 6, 2025 - 03:00 PM -
0
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான அணி தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவுஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, வீராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட் டுமே விளையாட முடிவு செய்துள்ளனர்.
இருவரையும் ஒருநாள் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம்பெறுவதில் தேர்வு குழு விருப்பத்துடன் இல்லை என்று கடந்த காலங்களில் தகவல் வெளியானது.
ஆனாலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தேர்வு பெற்றுள்ளனர். இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19 ஆம் திகதி, 23 ஆம் திகதி மற்றும் 25 ஆம் திகதிகளில் நடக்கிறது.
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றாலும் அணி தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் அணி தலைவர் சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி தலைவர் பதவியை பறித்ததால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. வீராட் கோலிக்கு இதே நிலைதான்.
2027 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் அணி தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே. அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுபவம் வாய்ந்த இருவரும் 2027 உலக கிண்ண அணிக்கு தேவை என்று கிரிக்கெட் வாரியத்தில் சில உறுப்பினர்கள் கருதுகின்றனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றியது. இது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது. அதே நேரத்தில் பலர் 2027 உலக கிண்ணத்திற்கு சுப்மன்கில் தலைமையிலான இளம் அணியை தயார்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தனர். இதனால் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
38 வயதான ரோகித் சர்மா 273 ஒருநாள் போட்டி யில் 11,168 ஓட்டங்களை எடுத்து உள்ளார். 32 சதமும், 58 அரை சதமும் அடித்து உள்ளார்.
36 வயதான விராட் கோலி 302 ஒருநாள் போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 51 சதமும், 74 அரை சதமும் இதில் அடங்கும்.