Oct 7, 2025 - 01:57 PM -
0
நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியவர்கள் தேர்தல் காலங்களில் இளைஞர்களின் வாழ்க்கையினை மேம்படுத்தப்போவதாக கூறுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கையினை அழித்தவர்கள் இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை மேம்படுத்தப்போவதாக கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.
உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவெட்டுவானில் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று மாலை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலகநாதன்,கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளக உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கந்தசாமி பிரபு,
உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டமாக 70 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 28 வீடுகளும் அமைக்கப்பதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டதாக 70 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்திருக்கின்றோம்.
அதனைவிட இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த கால அரசியல்வாதிகள் குறிப்பாக நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுக்கள் இந்த இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை இல்லாமல்செய்வதற்காக ஐஸ் போன்ற போதைப்பொருள் பாவனைகளை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தினை இல்லாமல்செய்யும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் காலங்களில் அவர்கள் எமது கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தற்போது ஊடகங்கள் ஊடாக தான் இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக கூறிவருகின்றனர். ஐஸ் போதைப்பொருள் தொடர்பான தொழிற்சாலைகளை உள்ளுரிலேயே உருவாக்கி இளைஞர் யுவதிகளை அதற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையினை அழித்தவர்கள் இன்று இந்த இந்த கருத்தினை முன்வைக்கின்றனர். இளைஞர் யுவதிகளை வளப்படுத்தப்போவதாக இவர்கள் கூறுவது நகைப்புக்குரியதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையில் அடிமையானவர்களை சீர்படுத்துவதற்காக மூன்று மில்லியன் ரூபா புனர்வாழ்வு மையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை எடுத்துள்ளது.
ஐநாவில் ஜனாதிபதி உரையாற்றியிருந்த நிலையில் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவினை வழங்கியிருந்தார்கள்.புதிய அரசாங்கத்தின் ஊடாக இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகள் மாற்றமடைந்துள்ளதை இன்று சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. சர்வதேச நாடுகளில் ஒத்துழைப்புடன் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
சர்வதேச நாடுகளில் ஆதரவுகள் இந்த அரசாங்கத்திற்கு இல்லையென எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்த நிலையில் இன்று அவர்கள் மௌனமடைந்துள்ளனர்.மனித உரிமை விடயத்தில் சர்வதேச ரீதியாக ஆதரவு எங்களுக்கு பலமாக கிடைத்திருக்கின்றது.
ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் பலவித கருத்துகளை நாங்கள் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை இல்லாமல்செய்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல் தொடர்பில் நாங்கள் பேசியிருந்தோம். அந்தடிப்படையில் நாங்கள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அண்மைகாலத்தில் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை குறைத்திருந்தோம். அதன்ஊடாக வீணடிக்கப்படும் நிதிகளை சேமித்திருக்கின்றோம். அதேபோன்று அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். தற்போதுதான் நாங்கள் ஒரு வருடத்தினை கடந்திருக்கின்றோம். நாங்கள் அதனை செய்வதற்கு சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியுள்ளது. சட்ட திருத்ததினை மேற்கொள்ள நீடித்தகாலம் தேவையாகவுள்ளது. அரசியலமைப்பு ரீதியாகவும் மாற்றத்தினைக்கொண்டுவரவுள்ளது. இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி மிக விரைவில் நிறைவேற்று அதிகாரம் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
--