Oct 7, 2025 - 04:42 PM -
0
மட்டக்களப்பில் பாலஸ்தீன காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு, இன அழிப்புக்கு நியாயம் கோரி மற்றும் தனி நாடாக அங்கு பிரகடனம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி, 1245 ஆவது நாள் நியாய பயணத்தின் ஊடாக பாலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பெண்கள், இன்று (07) கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள செபஸ்தியார் ஆலயத்திலிருந்து காந்தி பூங்கா வரை கவனயீர்ப்பு நடைபயணம் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரை, 'நீதி நியாயம் கோரி 1245 ஆவது நாள் நியாய பயணம்' என்ற தொனிப்பொருளில், அநீதி மற்றும் படுகொலைகளுக்கு எதிராக சுலோகங்கள் ஏந்தியவாறு பெண்கள் அமைப்பினர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காசா யுத்தம் தொடங்கி மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு, பெண்கள் நியாய பயண அமைப்புடன் கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள செபஸ்தியார் ஆலயத்தில் முன்னாள் பெண்கள் ஒன்று கூடினர்.அதனைத் தொடர்ந்து, "77 வருடங்களாக பாலஸ்தீனத்தை உன்னை புதைக்க முயற்சித்துள்ளனர்.
மீண்டும் மீண்டும் நீ சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுவாயாக. உப்பில்லா உணவு போல, பாலஸ்தீனம் இல்லாத நாடு முழுமை அற்றதும் சுவையற்றதுமாக இருக்கும். ஆற்றிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் விடுதலை அடையும்" என்ற சுலோகங்களை கழுத்தில் தொங்கவிட்டவாறு, அவர்கள் அங்கிருந்து காந்தி பூங்கா வரை நடைபயணமாக சென்றடைந்தனர்.பின்னர், காந்தி சிலையை அடைந்து, காந்தியின் உருவத்தை பாலஸ்தீன அடையாளம் கொண்ட துணியால் சுற்றி, தலைக்கு மேல் ஒரு குடையை பொருத்தி, "யுத்தத்தின் வேதனையை அறிந்தவர்கள் நாம். இந்த வேதனை எங்கும் தொடரக் கூடாது, நாளைய மழலைகள் பலியாகக் கூடாது" என்பதே எமது வேண்டுதல் என்று குரல் எழுப்பினர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
--