Oct 7, 2025 - 05:24 PM -
0
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.
கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.
இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியானது. இதனால் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
இதனிடையே கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி புகழ்பெற்ற பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்று இணையத்தில் தகவல் தீ போல பரவியது.
இந்நிலையில், இந்த தகவலை பிரதீப் ரங்கநாதன் மறுத்துள்ளார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நான் இயக்கவில்லை. தற்போது நடிப்பில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயம் ரஜினி - கமல் நடிக்கும் படத்தை இயக்கம் வாய்ப்பு எனக்கு வந்ததா? என்பதை பற்றி எதையும் என்னால் இப்போது கூறமுடியாது" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதனும் இருந்துள்ளார் என்பது அவரது பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

