Oct 8, 2025 - 11:04 AM -
0
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர்கள் ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் தொன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.339.82 டிரில்லியன் செலவாகும்.
போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.
குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம்.
இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% வைத்தியசாலைகள் மற்றும் 90% பாடசாலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 90% பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசாவின் 80% பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32% ஸ்ட்ராபெர்ரிகள், 28% தக்காளி மற்றும் 15% வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83% பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன. வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் இரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.
ஐநாவின் சுயாதீன விசாரணை ஆணைக்குழு காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.