Oct 8, 2025 - 12:33 PM -
0
தமிழகத்தையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி, தமிழக வெற்றிக் கழகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த திடீர் திருப்பம், இந்த வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியும், அதுவரை இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் கோரி, சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் பொலிஸாருக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை கரூரில் தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "கரூர் விபத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் அது முறையாக நடைபெறாது. இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை," என்ற முக்கிய குற்றச்சாட்டை தவெக முன்வைத்துள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி, இன்று காலை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்குமா அல்லது விசாரணையைத் தொடர அனுமதிக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு பொலிஸாரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.