Oct 11, 2025 - 09:37 PM -
0
தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதை 90 கலைஞர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி நடிகர்களான விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, ஜோர்ஜ் மரியன், நடிகை சாய் பல்லவி, இயக்குனர்களான லிங்குசாமி, மணிகண்டன், பிரபு சாலமன், இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, நடன இயக்குனர் ஷாண்டி உள்பட மொத்தம் 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாரதியார் விருது (இயல்) விருது, முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் கலாநிதி கே.ஜே. யேசுதாஸுக்கும் பாலசரசுவதி விருது (நாட்டியம்) விருது, பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பிலே நடைபெறக்கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு தலைசிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உங்களுடைய கலையை கலைத்தொண்டை இத்தனை ஆண்டு காலம் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் அந்த உழைப்பை அரசு அங்கீகரித்து போற்றக்கூடிய இந்த பாராட்டுதான் தலைசிறந்த பாராட்டு. ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்.
90 வயதான முத்துக்கண்ணம்மாளும் விருது பெறுகிறார், இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்.
மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.