Oct 13, 2025 - 06:17 PM -
0
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மருதானை பகுதியில் வாடகைக்கு முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒன்லைன் செயலி ஒன்றின் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனர் என வட்டவளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி இவர்கள் முச்சக்கரவண்டியில் இன்று பயணித்துக்கொண்டிருந்தபோது, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்களது முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதன்போது கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் வசமிருந்து 4 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் 23,000 ரூபாய் பணமும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பின்னர் இவர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
--