Oct 13, 2025 - 06:29 PM -
0
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி செய்தவர்கள், உரிமமின்றி மீன்பிடி செய்தவர்கள் மற்றும் உள்ளூர் நீர்நிலைகளில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 11 டிங்கி படகுகள், இரண்டு படகுகள் மற்றும் ஒரு கெப் வாகனம் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நகர எல்லைகள், திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் பொயிண்ட், கொக்கிளாய், கதிரவெளி பொயிண்ட், புடவைக்கட்டு, ஃபவுல் பொயிண்ட், ஓட்டமாவடி, பிளாண்டன் பொயிண்ட், கல்குடா, கல்லராவ கடற்கரை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வாகனத்துடன், கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோப்பாய் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.