Oct 13, 2025 - 09:03 PM -
0
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.
இது அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பள உயர்வை நடைமுறைப்படுத்தும் முறைமைகள் குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது, நிறுவனங்களின் பிரதிநிதிகள் சம்பள உயர்வு தொடர்பான தமது கருத்துக்களையும், நடைமுறைச் சாத்தியப்பாடுகள் குறித்த ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
மேலும், தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்பதைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இத்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என உறுதியளித்தார்.
இத்துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.