Oct 14, 2025 - 04:12 PM -
0
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினர் வெடிக்க வைத்து அழித்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வயலில், கடந்த 11 ஆம் திகதி வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் நிலத்தைப் பண்படுத்தும்போது, நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களைக் கண்டறிந்து பொலிஸாருக்கு அறிவித்தார்.
இதையடுத்து, பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவை வரவழைத்து, புதைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் குண்டுகள், ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கலனொன்றில் இருந்த ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று, விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் வெடிக்க வைத்து அழித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
--