Oct 15, 2025 - 01:41 PM -
0
கல்வி மற்றும் தொழில் ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் பாரிய இடைவெளியைப் போக்குவதற்கான வலுவான படியொன்றைக் குறிக்கும் வகையில், ஹட்ச் ஸ்ரீலங்கா மற்றும் NSBM Green University ஆகியன செப்டெம்பர் 17 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
வளர்ந்து வரும் திறமைசாலிகளை இனங்கண்டு அவர்களை வளர்ப்பது, கல்வி வழங்கல்களை செம்மைப்படுத்துவது, மற்றும் மாணவர்களின் தொழில்முனைவு அபிலாஷைகளுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் இந்த இரு நிறுவனங்களும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கு மேற்குறிப்பிட்ட உடன்படிக்கை வழிவகுத்துள்ளது.
இந்த ஒத்துழைப்பின் கீழ், பட்டதாரி மாணவர்கள் பெறுமதிமிக்க நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இடமளிப்பதற்கு, உள்ளகப் பயிற்சிகள் மற்றும் பயிலுநர் பதவிகள் மூலமான வாய்ப்புக்களை ஹட்ச் ஸ்ரீலங்கா அவர்களுக்கு வழங்கும். இந்த ஆரம்ப மட்டத்திலான பணி நிலைகளுக்கு அப்பால், யதார்த்த உலகின் நடைமுறைகள் குறித்த நுண்ணறிவை மாணவர்களுக்கு வழங்கி, எதிர்கால திறமைசாலிகள் மத்தியில் ஹட்ச் நிறுவனத்தின் பிரசன்னத்தை வலியுறுத்தும் வகையில், NSBM ல் இடம்பெறும் செயலமர்வுகள் மூலமாக தொழில்தருநர் நாமத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளையும் இக்கூட்டாண்மை உள்ளடக்கியுள்ளது. பாட நெறி மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டுக்கான தொழில்துறை உள்ளீடுகளை வழங்கி, கள விஜயங்கள் (முற்கூட்டிய நியமனத்துடன்) மற்றும் ஒப்படைப் பணி ஆகியவற்றுடன் மாணவர்களுக்கு உதவி, இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டுள்ள வர்த்தகநாம மதிப்புக்களைப் பிரதிபலிக்கின்ற விசேட செயற்திட்டங்களில் ஒன்றிணைந்து உழைப்பதனூடாக அறிவைப் பகிரும் முயற்சிகளுக்கு NSBM மற்றும் ஹட்ச் ஸ்ரீலங்கா ஆகியன ஒத்துழைத்துச் செயற்படும்.
திறமைமிக்க பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்ளவும் இந்த உடன்படிக்கை இடமளிப்பதுடன், உச்சப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற பட்டதாரி மாணவர்களுக்கு ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தில் தொழில்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களும் உள்ளன. மாணவர்களுக்கு அர்த்தமுள்ள அனுபவத்தைப் பெற்று, தொழில் வாழ்வுக்கு தம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள இடமளிக்கும் அதேசமயம், தொழில்துறையின் தேவைகளுடன் ஒன்றிய திறமைசாலிகளைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்று அபிமானம் பெற்ற தொழில்தருநர் என்ற தனது மதிப்பை ஹட்ச் ஸ்ரீலங்கா மேலும் வலுப்படுத்திக் கொள்ள உதவுகின்ற வகையில், இக்கூட்டாண்மையானது இரு நிறுவனங்களுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கவுள்ளது.
இக்கூட்டாண்மை குறித்து ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார அவர்கள் கருத்து வெளியிடுகையில்:
“இம்முயற்சியில் NSBM Green University உடன் கைகோர்ப்பது எமக்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாகும். மகத்துவம், வளர்ச்சி, மற்றும் மாணவர்கள் வெற்றி காண உதவுதல் ஆகிய குறிக்கோளை நாம் பகிர்ந்து கொண்டுள்ளமையால், இந்த ஒத்துழைப்பிற்கு நாம் உண்மையில் தகுதி உடையவர்கள் என நாம் நம்புகின்றோம். பட்டதாரி மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்று வெளிவருகின்றவர்களுக்கு வழிகாட்ட நாம் ஆவலாக உள்ளதுடன், தொழில்கள் மற்றும் பரந்தளவில் தொலைதொடர்பாடல்கள் துறை ஆகிய இரண்டுக்கும் நன்மையளிக்கும் ஆற்றல்களை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றோம்.”
NSBM பிரதித் துணை வேந்தர் பேராசிரியர் சமிந்த ரத்னாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
“புத்தாக்கம் மற்றும் பணியாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு நிறுவனமான ஹட்ச் ஸ்ரீலங்காவுடன் கைகோர்ப்பதையிட்டு NSBM மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. எமது பாடத்திட்டத்தை வளப்படுத்தி, மாணவர்களுக்கு உண்மையான தொழில்துறை அனுபவத்தை வழங்கி, அவர்களுடைய தொழில்முனைவு அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்க இந்த உடன்படிக்கை இடமளிக்கும். எதிர்காலத்தில் எழுகின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயாரான, தொழில் வல்லுனர்களின் புதிய தலைமுறையை இந்த ஒத்துழைப்பு தோற்றுவிக்குமென நாம் நம்புகின்றோம்.” உயர் கல்வி குறித்த நீண்ட கால கூட்டாண்மைகளைக் கட்டியெழுப்பி, மனித மூலதனத்தின் மீது முதலீடு செய்து, இலங்கையின் திறமைசாலிகள் குழாத்திற்கு நேர்மறைப் பங்களிப்பை வழங்குவதில் ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை NSBM உடனான இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.