வணிகம்
“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” திட்டத்தின் மட்டக்களப்பு செயற்பாடுகள் பூர்த்தி – இறுதிக் கட்டம் அஹங்கமவில் முன்னெடுக்கப்படவுள்ளது

Oct 15, 2025 - 04:32 PM -

0

“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” திட்டத்தின் மட்டக்களப்பு செயற்பாடுகள் பூர்த்தி – இறுதிக் கட்டம் அஹங்கமவில் முன்னெடுக்கப்படவுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC) ஸ்ரீ லங்கா, தேசிய கலாசார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஐரோப்பிய வலையமைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடான நாம் முன்னெடுக்கும் பாதைகள் செயற்திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகள் மற்றும் ஒன்றியத்துடன் இணைந்துள்ள நாடுகளும், Good Life X உடன் இணைந்து செப்டெம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு Dreamspace அகடமியில், மட்டக்களப்பிற்கான தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தன. இந்தத் திட்டத்தின் நான்காவதும், இறுதிக் கட்டம் தென் மாகாணத்தின் அஹங்கமவில் ஒக்டோபர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் Dreamspace அகடமியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது. சவால்கள் சார்ந்த பயிலல், களமட்ட புத்தாக்கம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் துணிகர முயற்சிகளை கட்டியெழுப்பல் போன்றவற்றினூடாக உள்ளூர் சமூக-பொருளாதார மற்றும் சூழல் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு சமூக முயற்சியாக அமைந்திருந்தது. இந்நிகழ்வில் பொதுக் கண்காட்சி, நேரலை இசை கச்சேரி, தொடர்பாடல்களுடனான பயிற்சிப்பட்டறைகள், பரீட்சார்த்த பயிலல் அமர்வுகள் மற்றும் திறன் கட்டியெழுப்பும் பயிற்சிப்பட்டறைகள் போன்றன Hope Market இன் அனுரங்கி மென்டிஸ் மற்றும் COCA Symbiosis இன் பூர்ணிமா ஜயசிங்க ஆகிய நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

Dreamspace அகடமியின் நிகழ்ச்சிகளுக்கான தலைமை அதிகாரி லக்சன்யா முத்துலிங்கம் நிகழ்வின் வெற்றிகரமான முன்னெடுப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், “மட்டக்களப்பில் இதுபோன்றதொரு நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது. பிராந்தியத்தின் ஆக்கத்திறன் மற்றும் நிலைபேறான புத்தாக்க சமூகத்துக்கு முக்கிய திருப்புக்கட்ட நிகழ்ச்சியாக இது அமைந்தது.” என்றார். ஆக்கத்திறன், நிலைபேறாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரிவுகளில் பெருமளவு செயற்பாடுகளைக் கொண்டு இரு நாட்கள் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்ச்சி தொடர்பில் GLX பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் செயற்திட்ட பணிப்பாளர் எம்மா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் பெருமளவானவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்ததுடன், நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டம் அதன் இறுதி கட்டத்தை அஹங்கமவில் ஒக்டோபர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படும். அதில் உள்ளூர் சுற்றுலாத் துறையை நிலைபேறான, ஆக்கத்திறன் தொழிற்துறைகளுடன் பெருமளவு கைகோர்ப்பை கட்டியெழுப்பும் வகையில் டிஜிட்டல் கட்டமைப்பை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.” என்றார். 

தெற்காசியாவில் இலங்கையை நல்லொழுக்கமான மற்றும் நிலைபேறான மையமாக வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் பசுமைப் பொருளாதாரம் அடங்கலாக பரந்தளவு துறைகளில் கட்டமைப்பை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு பிராந்திய ஈடுபாடுகளும் அமைந்திருந்தன. கலாச்சார துறைகளினுள் நிபுணத்துவ ஒன்றிணைவுகள் மற்றும் திறன்களை வலிமைப்படுத்தல் மற்றும் கொழும்புக்கு அப்பால் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் முதல் கண்டி மற்றும் காலி போன்ற மையங்களில் தொடர்பு வலையமைப்புகளை உறுதி செய்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளினூடாக, விழிப்புணர்வை பரவலடையச் செய்தல் மற்றும் கட்டமைப்பின் பயன்பாடு போன்றவற்றினூடாக செயற்திட்டம் அதன் இலக்குகளை வெற்றிகரமாக எய்தியுள்ளது. அத்துடன், பரந்தளவு பங்காளர்களுக்கிடையே அர்த்தமுள்ள இணைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாவுக்கான நிலைபேறான எதிர்காலத்தின் உள்ளக அங்கமாக இலங்கையின் ஆக்கபூர்வ மற்றும் கலாச்சார தொழிற்துறைகளை நிலைநிறுத்துவதிலும் பங்களிப்பு வழங்கியுள்ளது. 

GLX பற்றி 

தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்க்கையை மேம்படுத்தும் நிறுவனங்களின் புதிய அலையை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் புத்தாக்கம் மற்றும் அபிவிருத்திசார் அமைப்பாக Good Life X (GLX) திகழ்கின்றது. ஆரம்பநிலை, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சிகள் மற்றும் மீளுருவாக்கத்தில் கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு அவசியமான முக்கியமான அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை தமது தீர்வுகளினூடாக நிறுவனம் வழங்குகின்றது. 2018 ஆம் ஆண்டு முதல் இயங்கும் GLX, இதுவரையில் 180 இலங்கை வியாபாரங்களுக்கு மாற்றத்துக்கான மீளுருவாக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு #scalethegood பங்களிப்பை வழங்கியுள்ளது. 

EUNIC பற்றி 

ஐரோப்பிய ஒன்றிய தேசிய கலாசார நிறுவகங்கள் – EUNIC, ஐரோப்பாவின் தேசிய கலாச்சார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வலையமைப்பாகும். இதில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் இணை நாடுகளைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் உள்ளனர். EUNIC இலங்கை - Alliance Française மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவில் உள்ள பிரான்ஸ் தூதரகம், Goethe-Institut, பிரிட்டிஷ் கவுன்சில், சுவிஸ் தூதரகம், நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம் மற்றும் இத்தாலி தூதரகம் ஆகியன, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் ஆதரவுடன், கலாச்சார உறவுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புகளை கட்டியெழுப்புவதற்கும் பன்முகத்தன்மையை ஆதரிப்பதற்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05