Oct 16, 2025 - 09:53 AM -
0
கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தித் துறையில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டதும், Aberdeen Holdings இன் துணை நிறுவனமொன்றான Ruhunu Farms (பிரைவட்) லிமிடெட், ஹம்பாந்தோட்டையில் தனது விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முட்டை உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தது. தென் மாகாண மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான முட்டைகளை 46 ஆண்டுகளாக விநியோகித்துக் கொண்டிருக்கும் இந் நிறுவனத்தின் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
சிறப்பு விழா Ruhunu Farms வளாகத்தில் நடைபெற்றதுடன், Aberdeen Holdings தவிசாளர் சத்தார் காசீம், பிரதி தவிசாளர் ஹசன் காசீம் மற்றும் குழுமத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இன்று Ruhunu Farms ஆக வளர்ந்துள்ள M.R. Thassim & Company இன் ஸ்தாபகர் அஸ்மி தாஸீம் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வின் போது, பல ஆண்டுகள் விடாமுயற்சியுடன் பணியாற்றி நிறுவன வளர்ச்சிக்கு பங்காற்றிய பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் போது, Ruhunu Farms இன் பொது முகாமையாளர் மொஹமட் ரிஸ்வான் கருத்துத் தெரிவிக்கையில், “எமது 46 வருட கால பயணத்தில் இந்த மைல்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக அமைந்திருப்பதுடன், விரிவாக்கம் செய்யப்பட்ட உற்பத்தி நிலையத்தினூடாக, எமது உற்பத்தித்திறன் பாரியளவில் அதிகரிக்கின்றது. தரம், நிலைபேறாண்மை மற்றும் இலங்கையின் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தித் துறையின் நீண்ட கால ஸ்திரத்தன்மை போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலித்து, எமது ஊழியர்கள் மற்றும் பங்காளர் முதல் வாடிக்கையாளர்கள் வரையான எமது விநியோகத் தொடரில் அர்த்தமுள்ள பெறுமதியை உருவாக்கும் வகையில் இது அமைந்துள்ளது. மேலும், விரிவாக்கப் பணிகளில், ரூ. 260 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதனூடாக, வருடாந்தம் 10 மில்லியன் முட்டைகளை மேலதிகமாக Ruhunu Farms நிறுவனத்தினால் உற்பத்தி செய்யக்கூடியதாக காணப்படுகிறது. இது நிறுவனத்தின் விநியோக ஆற்றல்களை மேலும் வலிமைப்படுத்தி, உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்தும்.” என குறிப்பிட்டார்.
1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Ruhunu Farms, தென் இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. இன்று, சில்லறை விற்பனை, விடுதி-சுற்றுலா, துரித நுகர்வுப் பொருட்கள் (FMCG) மற்றும் உணவு உற்பத்தித் துறைகளின் தினசரி முட்டைத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதில் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. நெறிப்படுத்தப்பட்ட கால்நடை பராமரிப்பு, பயோபாதுகாப்பு (Biosecurity) மற்றும் சமூக பங்காண்மை ஆகியவற்றில் உறுதிப்பாட்டுடன், வீடுகளுக்கும் வியாபாரங்களுக்கும் சுகாதாரத் தரமிக்கதுமான முட்டைகளை வழங்கும் நம்பகரமான நிறுவனமாகவும் Ruhunu Farms திகழ்கிறது.
இவ்விரிவாக்கம் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி சமூகமும் சுற்றுச்சூழலும் பயனடையும் வகையில் எதிர்கால நோக்கமுடைய பொறுப்புணர்வுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் Aberdeen Holdings குழுமத்தின் தூர நோக்கினை மேலும் உறுதி செய்கிறது.