Oct 16, 2025 - 06:45 PM -
0
இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான கொமர்ஷல் வங்கி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தடகள வீராங்கனை தருஷி கருணாரத்னாவை தனது வர்த்தகநாமத் தூதுவராக நியமித்துள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற நட்சத்திர வீராங்கனையான தருஷி, இலங்கையில் குறுகிய காலத்தில் இல்லந்தோறும் அறியப்பட்ட ஒருவராக மாறியுள்ளார். இவர் நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் வசதியான டிஜிட்டல் வங்கியிச் சேவையான கொம்பேங்க் டிஜிட்டல் செயலியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். தருஷி கருணாரத்ன, மீண்டெழும் திறன், அர்ப்பணிப்பு மற்றும் வளர்ச்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்துவதாகவும், இது இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்ற நிதி நிறுவனம் என்ற கொமர்ஷல் வங்கியின் அடையாளத்துடன் முழுமையாகப் பொருந்துவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் வர்த்தகநாமத் தூதுவராக தருஷி கருணாரத்னாவை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம், என்று வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கூறினார். உறுதிப்பாடு மற்றும் ஒழுக்கத்தின் மூலம் அசாதாரண முடிவுகளை அடைய முடியும் என்பதை நிரூபித்ததன் மூலம் தருஷி எல்லாத் தலைமுறையினருக்கும் உத்வேகம் அளித்துள்ளார். நம்பிக்கைக்குரிய இளம் தடகள வீராங்கனையாக இருந்து சாதனை படைத்த சாம்பியனாக அவரது பயணம், கொமர்ஷல் வங்கியை இலங்கையின் தனியார் வங்கித் துறையில் தலைமைத்துவத்தை நிலைநிறுத்திய அதே உந்துதலைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், உள்நாட்டிலும் உலக அளவிலும் நம்பிக்கையையும், சிறந்து விளங்கும் தன்மையையும் ஊக்குவிப்பதற்கு நாம் முயற்சிசெய்கிறோம்.
கொமர்ஷல் வங்கியுடனான தனது கூட்டாண்மை தொடர்பாக தருஷி கருணாரத்ன கூறுகையில், இலங்கையின் நிதித்துறையில் நம்பிக்கைக்குரிய ஓரு முன்னணி நிறுவனமாக இருக்கும் கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் தடகளப் பாதையில் எனது எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதைப் போலவே, கொமர்ஷல் வங்கியும் சிறப்பு மற்றும் புத்தாக்கத்திற்கான அதன் அர்ப்பணிப்பால் செயற்படுத்தப்படுகிறது. செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிமீது என்னைப் போன்ற ஆர்வத்தைக் கொண்ட ஒரு வர்த்தகநாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இலங்கையின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரணவை கடந்த ஆண்டு வர்த்தகநாமத் தூதுவராக வங்கி வெற்றிகரமாக நியமித்ததைத் தொடர்ந்து இந்த நியமனமும் அமைந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு வாடிக்கையாளர் விசுவாசத்தை வலுப்படுத்தவும், நாட்டின் மிகப்பெரிய வரவு அட்டைத் (Debit card) தளமான கொமர்ஷல் வங்கி வரவு அட்டை (Debit card) வர்த்தகநாமத்தின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும் உதவியுள்ளது.
தருஷி கருணாரத்ன இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார், அவர் 800 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார், சுசந்திகா ஜெயசிங்க மற்றும் தமயந்தி தர்ஷாவுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். 2023 ஆம் ஆண்டில், பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் மேலும் பெருமை சேர்த்தார், அங்கு அவர் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் அந்தப் போட்டியின் 25 ஆண்டுகால ஆசிய சாதனையையும் முறியடித்தார்.
வர்த்தகநாமத் தூதுவருக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. எஸ். பிரபாகர், சந்தைப்படுத்தல் பிரதான முகாமையாளர் திருமதி. அபர்ணா ஜாகொட மற்றும் தருஷியின் தனிப்பட்ட முகாமையாளர் திருமதி. சுரஞ்சி பீரிஸ் ஆகியோர் தருஷி கருணாரத்னாவுடன் படத்தில் உள்ளனர்.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.