செய்திகள்
கோடிக்கணக்கில் கொள்ளை - ஹெலம்ப ரமேஷ் கைது

Oct 16, 2025 - 11:31 PM -

0

கோடிக்கணக்கில் கொள்ளை - ஹெலம்ப ரமேஷ் கைது

வீடொன்றுக்குள் நுழைந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் 'ஹெலம்ப ரமேஷ்' என்ற நபர் தங்காலை குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சந்தேகநபர் வீரகெட்டிய, பொல்தவானேவில் வசிக்கும் 36 வயதான, ஒரு பிள்ளையின் தந்தை என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 

கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி, சந்தேகநபர் ஒரு சிகரெட் வாங்குவதற்காக வீரகெட்டிய, பெதிகமவில் அமைந்துள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ள நிலையில், அப்போது அக்கடையின் மேல் மாடியில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு கோடியே ஐம்பது இலட்சத்து எண்பதாயிரம் (15,280,000) ரூபா பெறுமதியான தங்க நகைகள், பணம் மற்றும் இதரப் பொருட்களைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் இன்று வீரகெட்டிய, பெதிகம பிரதேசத்தில் வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபரின் சட்டைப் பையில் இருந்து 50 இலட்சம் ரூபாவுக்கு (5 மில்லியன்) அண்ணளவான பெறுமதியான தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மேலும், அவர் வந்ததாகக் கூறப்படும் வேனில் இருந்து 9 மில்லிமீட்டர் ரக 13 துப்பாக்கி ரவைகளும், T56 ரக 2 துப்பாக்கி ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்த தகவலின் அடிப்படையில், கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துவிச்சக்கர வண்டி, திருடிய பொருட்களை விற்று வாங்கப்பட்ட 21 இலட்சம் ரூபா பெறுமதியான வேன், பணமாக 17.5 இலட்சம் ரூபா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றைக் பொலிஸார் மீட்டுள்ளனர். 

இந்தச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் திருட்டு மற்றும் ஹெரோயின் தொடர்புடைய பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

கடந்த ஜூன் மாதம் மித்தெனிய, தோரக்கொலயா பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியவர் இவரே என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஹக்மனையில் நடந்த விழா ஒன்றில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அவ்வாறு வழங்கியதாகவும், அதற்குப் பதிலாக 'தெம்பிலி லஹிரு' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் இருந்து 5 கிராம் போதைப்பொருள் கிடைத்ததாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05