Oct 17, 2025 - 08:07 PM -
0
இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலிங்,
"நாங்கள் ஒரு படி பின்னோக்கிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பலனாக இப்போது மிகவும் வலிமையான வளர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 5% வளர்ச்சி. இந்த ஆண்டு அது 4.2% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு அது 3% ஆக மாறுவதற்கான ஆற்றல் உள்ளது. இந்த நேரத்தில் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், அதிக பலன்களைப் பெறுவதற்கு இந்தத் திட்டத்தை மேலும் தொடர்வது முக்கியம். அப்போது வளர்ச்சி வரும். அது தொடர்ந்து நடைபெறும். இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்னவென்றால், வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் பொது நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய பங்கைக் வகிக்கும். அத்துடன், பொது நிறுவனங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பலன்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க இது மிகவும் அவசியம்" என்று கூறினார்.

