Oct 20, 2025 - 01:44 PM -
0
தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு இன்று (20) ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வழிபாடுகளில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும், ராமகிருஷ்ண மடத்தின் துறவியுமான ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தஜி மஹராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதேபோன்று இன்றைய தினம் இலங்கை சாரணர் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'சாரணர் வாரம் 2025' இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தீபத்திருநாளை முன்னிட்டும் சாரணிய மாணவர்கள் கலந்துகொண்ட வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
மட்டக்களப்பில், இந்நிகழ்வு மாவட்ட சாரணர் தலைவர் ரி.ருத்தரகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லடி உப்போடையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிசன் மற்றும் மாணவரில்லத்தில் அமைந்துள்ள இராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில் வளாகங்களில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் உதவி மாவட்ட ஆணையாளர் (நிர்வாகம்) அ.நிசாந்தன், உதவி மாவட்ட ஆணையாளர் (மட்டக்களப்பு நகர்) எம்.சந்திரசுசர்மன், உதவி மாவட்ட ஆணையாளர் (பட்டிருப்பு) என்.பிரதீபன் ஆகியோருடன் மாவட்ட சாரணத் தலைவர்களும் சாரணத் தலைவர்களும், மேலும் 150 இற்கும் மேற்பட்ட சாரணர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான நற்சிந்தனைகளும் வழங்கப்பட்டதுடன் ஆசியும் வழங்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
--

