Oct 21, 2025 - 03:17 PM -
0
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பன்சேனை வாதகல்மடு பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பன்சேனை வாதகல்மடுவைச் சேர்ந்த 58 வயதான 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தகரத்தினால் அமைத்த வீட்டில் தனியாக சம்பவ தினமான அதிகாலை 2.00 மணியளவில் நித்திரையில் இருந்துள்ள நிலையில் வீட்டில் இருந்த நெல்லை உண்பதற்காக காட்டு யானை வந்த சத்தத்தை கேட்டு எழும்பி வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடியுள்ளார்.
இதன்போது யானை அவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யானை தாக்கி இறந்தமைக்கான பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரம் முதல்கட்டமாக மரண சடங்கிற்காக ஒரு இலச்சம் ரூபாய் காசோலையை உயிரிழந்தவரின் மகனிடம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--

