Oct 24, 2025 - 06:22 PM -
0
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (24) மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்துவீழ்ந்ததன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர் நகர், ஏறாவூர்ப்பற்று, போரதீவுப்பற்று செயலகப்பிரிவுகள் அடங்களாக பல இடங்களில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று மாலை பலத்த காற்றுடன் மழைபெய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடுமையான காற்று காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் வீழ்ந்ததன் காரணமாக வீதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
ஆரையம்பதியில் உள்ள மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு அருகிலிருந்த மைதான ஸ்ரேடியம் காற்றினால் தற்றப்பட்டு ஆரையம்பதி வாகன தரப்பிடத்திற்கு மேல் விழுந்த காரணத்தினால் வாகன தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் செந்தில் தெரிவித்தார்.
இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதூர், சேத்துக்குடா போன்ற பகுதிகளில் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் வீதிகளில் மரம்முறிந்துவீழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதடைந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலைச்சோலை மற்றும் மைலம்பாவெளி, சிவபுரம் ஆகிய பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பான சேதவிபரங்களை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளைமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 19.2 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
--

