உலகம்
கனடாவுக்கு மேலும் 10 சதவீத மேலதிக வரியை விதித்த ட்ரம்ப்

Oct 26, 2025 - 06:56 AM -

0

கனடாவுக்கு மேலும் 10 சதவீத மேலதிக வரியை விதித்த ட்ரம்ப்

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் காட்டும், வரிவிதிப்புகளுக்கு எதிரான விளம்பரம் ஒன்றை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளைத் தாம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 

அந்த விளம்பரத்தை "மோசடி" என்று உலக பேஸ்போல் சம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக அதை நீக்காததற்காக கனேடிய அதிகாரிகளை அவர் கடுமையாக சாடியுள்ளார். 

உண்மைகளை அவர்கள் தவறாகச் சித்தரித்ததாலும், விரோதமாக செயற்படுவதாலும் கனடா தற்போது செலுத்துவதை விட 10% மேலதிக வரியை தாம் அதிகரிப்பதாக டொனாலட் ட்ரம்ப் சமூக ஊடகமொன்றில் குறிப்பிட்டுள்ளார். 

ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவில் தனது மாகாணத்தின் வரிவிதிப்புக்கு எதிரான விளம்பரப் பிரச்சாரத்தை இடைநிறுத்துவதாக செய்தியாளர்களிடம் கூறினார். 

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக, பிரதமர் மார்க் கேர்னியுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். 

எனினும், உலக பேஸ்போல் போட்டிகளின் போது உட்பட, வார இறுதியில் அந்த விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்றும் அவர் கூறினார். 

ட்ரம்ப், தமது முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து வரும் பொருட்கள் மீது அதிக வரிகளை விதிக்கத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டாத ஒரே G7 நாடு கனடா மட்டுமேயாகும். 

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பெரும்பாலான பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கனேடிய பொருட்கள் மீதும் அமெரிக்கா ஏற்கனவே 35% வரியை விதித்துள்ளது. 

மேலும், உலோகங்கள் மீது 50% வரி மற்றும் வாகனங்கள் மீது 25% வரி உட்பட, கனேடிய பொருட்கள் மீது துறை சார்ந்த வரிகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. 

ஆசியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது அனுப்பிய தனது பதிவில், ட்ரம்ப் அந்த வரிகளுடன் மேலும் 10 சதவீதப் புள்ளிகளை சேர்ப்பதாகக் கூறியுள்ளார். 

கனடாவின் ஏற்றுமதியில் முக்கால்வாசி அமெரிக்காவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், கனடாவின் வாகன உற்பத்தியில் பெரும்பகுதி ஒன்ராறியோவிலேயே அமைந்துள்ளது. 

ஒன்ராறியோ அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட இந்த விளம்பரம், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் அமெரிக்கப் பழமைவாதத்தின் அடையாளமுமான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், வரிகள் "ஒவ்வொரு அமெரிக்கரையும் காயப்படுத்துகின்றன" என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறது. 

இந்த வீடியோ, வெளிநாட்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்ட 1987 ஆம் ஆண்டின் தேசிய வானொலி உரை ஒன்றிலிருந்து சில பகுதிகளை கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05