Oct 26, 2025 - 04:51 PM -
0
2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா கண்டிப்பாக இடம்பெறுவார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் சிறப்பாக துடுப்பாடியிருந்தனர்.
ரோகித் சர்மா 121 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 74 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த போட்டி தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், ``கோஹ்லி மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங் செய்த விதத்தில் சில மாற்றத்தை நான் கண்டேன். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை அவர் தேவையில்லாமல் தொடவில்லை.
அதற்கு பதிலாக அவர் மிட் ஆன் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடித்தார். மேலும் பேட்டை நேராக வைத்து அவர் இன்று விளையாடினார். கடந்த 2 ஒருநாள் போட்டிக்கும் இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசம் தெரிந்தது.
இந்த இன்னிங்ஸ் மூலம் 2027 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக இருவரும் இடம் பெறுவார்கள். நாங்கள் அந்த தொடரில் விளையாட போகிறோம் என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார்கள்.
நாங்கள் விளையாட தயார் என்று அவர்கள் நினைத்தால் நிச்சயம் இருவரும் 2027 உலகக் கிண்ண தொடரில் இடம் பெற வேண்டும்.
என்னைக் கேட்டால் இன்றைய ஆட்டத்தை பார்த்தவுடன் இந்த இருவரின் பெயரை நேரடியாக உலகக் கிண்ண இந்திய அணியில் எழுதிவிடலாம்’’ என்றார்.

