Oct 28, 2025 - 01:18 PM -
0
மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மன்னார் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுள் ஒன்றாக இந்த காற்றலை விவகாரம் மாறியுள்ளது. அரசு கூறுகின்றது குறித்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது, அது நடைமுறைப்படுத்தப்படும் என்று. மன்னார் ஆயருடன் ஜனாதிபதி சந்தித்த போதும் இதையே கூறியிருந்தார். ஆனால் மன்னார் ஆயர் இன்றும் மக்களின் விருப்பத்தின் பக்கமே இருக்கின்றார்.
உலக நாடுகள் பலவற்றில் இன்றைய காலச் சூழலில் இயற்கை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அதனால் அவர்கள் தங்கள் நாடுகளில் மக்கள் வாழிடம் அற்ற பகுதிகளில்தான் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதே நேரம் இந்த திட்டம் மன்னாரின் இயற்கையையும் சுற்றுச் சூழலையும் கடல் உயிரினங்களையும் பாதிக்கும் என எமது புவியியல் ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராயும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்களின் கோரிக்கை இன்று 80 நாள்களை கடந்து போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்களின் நலன்களில் நாமும் பங்காளர்களாக இருந்து அவர்களது போராட்டத்தையும் கோரிக்கையையும் வலுச்சேர்க்க முடிவுசெய்துள்ளோம் என தெரிவித்தார்.
--

