Nov 3, 2025 - 04:49 PM -
0
நாடு முழுவதும் உள்ள கொமர்ஷல் வங்கி ஊழியர்கள் நிறுவன சமூகப் பொறுப்பிற்கான வங்கியின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தவும், முன்கூட்டியே கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை அன்று, இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வங்கிக்கு சமூகமளித்திருந்தனர்.
இந்த அடையாளச் செயற்பாடானது வங்கியின் பணியிடத்திலும், பிற சேவை செய்யும் சமூகங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பான, சமமான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 'அக்டோபர் மாதம் முழுவதும், கொமர்ஷல் வங்கியின் பல்வேறு கிளை ஊழியர்களும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துவதற்காக ஒன்றிணைந்தனர், மேலும் கல்வி மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் உயிர்களைக் காப்பாற்றும் என்ற செய்தியையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த உறுதிப்பாட்டை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் கொழும்பில் நடத்தப்பட்ட 2025 TLC (Touch | Look | Check-தொடுதல் | கண்டறிதல் | பரிசோதித்தல்) -மூவகைப் போட்டி தொடரின் முதற்தர அனுசரணையாளராக கொமர்ஷல் வங்கி, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் கைகோர்த்துள்ளது. இந்த தனித்துவமான முயற்சியானது, விளையாட்டின் வலிமையையும் உடல் நலக்கல்வியையும் ஒன்றிணைத்து, மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிதலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
பெண்கள் நல்வாழ்வில் வங்கியின் தொடர்ச்சியான கவனம் தொடர்பாக உரையாற்றிய கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. சனத் மனதுங்க, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு என்பது உடல்நலம் சார்ந்தது மட்டுமல்ல, அது கண்ணியம், பாதுகாப்பு மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கானது. கொமர்ஷல் வங்கியில், உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய பணியிடமானது பெண்கள் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் விருத்தியடைய உதவும் என்று நாம் நம்புகிறோம். எமது இளஞ்சிவப்பு ஆடைப் பிரசாரம் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடனான எமது பங்குடைமை போன்ற முயற்சிகள் மூலம், எமது ஊழியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் முதுகெலும்பாக திகழும் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
கொமர்ஷல் வங்கி தனது சொந்த செயல்பாடுகளுக்குள், தனது பணியிடங்களை பாதுகாப்பானதாகவும் பெண்களுக்கு மிகவும் ஆதரவாகவும் மாற்ற, முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் மேம்பட்ட சுகாதார சலுகைகள், சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட, தாய்மார்களுக்கான சிறப்பு விடுமுறை மற்றும் உதவி, பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு ஊழியரின் குரலும் கேட்கப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகள் ஆகியவை அடங்கும்.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

